கராச்சி: அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் இந்து மக்கள் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சினிமா பாடலுக்கு நடனமாடி, வண்ணங்களை பூசிக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம்தான் என தகவல். அண்மைய காலமாக அங்கு வசித்து வரும் இந்து மக்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சவால்களை எல்லாம் கடந்தே அவர்கள் தங்கள் நம்பிக்கையை பின்பற்றி வருகின்றனர். அதோடு தங்களது கலாச்சார பாரம்பரியத்தை தவறாமல் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகள் இதில் அடங்கும்.
மற்றொரு புறம் கராச்சி பல்கலைக்கழகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
- Krishna Tarachandani