உலகம்

அதிவேக புல்லட் ரயில்களால் சீன அரசுக்கு இழப்பு: சேவையை விரிவிபடுத்துவதை நிறுத்த யோசனை

செய்திப்பிரிவு

சீனாவில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரயில் சேவையை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதை அந்நாட்டு அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாமல் போனால் சீனாவின் ரயில் நிர்வாகம் மேலும் கடனாளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

உலகிலேயே மிக நீண்ட அதிவேக புல்லட் ரயில் சேவை வழங்கப்படுவது சீனாவில் தான். அங்கு சுமார் 10,000 கிலோ மீட்டர்களுக்கு மேல் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன. சீனாவில் இயக்கப்படும் மொத்த‌ 4,894 ரயில்களில் 2,660 ரயில்கள் அதிவேக புல்லட் ரயில்கள் ஆகும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அந்நாட்டு ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதலீடுகள் 105 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து (சுமார் ரூ.6.30 லட்சம் கோடி) 133 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ. 7.98 லட்சம் கோடி) உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதிதாகத் தொடங்கப்பட இருந்த ரயில்வே திட்டங்களின் எண்ணிக்கை 20ல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

‘ஆனால் இப்படியே அதிவேக ரயில் திட்டங்களை மட்டும் விரிவுபடுத்திக் கொண்டு போனால் ரயில்வே துறைக்கு அதிக கடன் சுமை ஏற்படும். ஏற்கெனவே உள்ள அதிவேக புல்லட் ரயில்கள் மக்களை அதிக அளவில் கவரவில்லை. அவற்றில் பெரும்பாலான ரயில்கள் நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன' என்கிறார் பெய்ஜிங்கில் உள்ள ஜியாதோங் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் சாவோ ஜியான்.

மேலும் அவர், ‘அதிவேக ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு மாற்றாக, சீன அரசு சாதாரண ரயில் திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். தவிர, நகரப்புற போக்குவரத்தையும் அதிகரிக்க வேண்டும். ஏற்கெனவே பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகருக்கிடையே இயக்கப்படுகிற அதிவேக ரயிலைத் தவிர்த்து மற்ற அதிவேக ரயில்கள் எல்லாம் காலப்போக்கில் நட்டத்தையே ஏற்படுத்தும்' என்கிறார்.

கடந்த ஆண்டில் மட்டும் சீன ரயில்வே துறையின் மீது 43 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.80 லட்சம் கோடி) கடன் சுமை இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனப் பிரதமர் லீ கெகியாங், ஷாங்காய் மற்றும் கன்மிங் ஆகிய நகரங்களுக்கிடையே தயாராகி வரும் அதிவேக ரயில் பாதை கட்டுமான தளத்தைப் பார்வையிட்டிருக்கிறார். அதன் மூலம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதால் தனது தள்ளாடும் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வரமுடியும் என்று சீனா கருதுகிறது என்பது தெளிவாகிறது.

இதற்கிடையே, சீனாவைப் பார்த்து துருக்கி, தாய்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் அதிவேக புல்லட் ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் டெல்லி மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களுக்கிடையில் மிதவேக புல்லட் ரயில் சேவையையும், மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கிடையில் அதிவேக புல்லட் ரயில் சேவையையும் வழங்க திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

SCROLL FOR NEXT