ட்ரம்பின் சவுதி அரேபியா பயணம் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளுடான அமெரிக்காவின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே இம்மாத இறுதியில் ட்ரம்பின் வெளிநாட்டுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி இஸ்ரேல், வாடிகன், சவுதி அரேபியாவுக்கு அவர் செல்லவிருக்கிறார்.
இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறும்போது, "ட்ரம்ப்பின் பயணம் மூலம் அமெரிக்காவுக்கும் முஸ்லீம் நாடுகளுக்கு இடையே பிரச்சனை இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் அரேபிய நாடுகள் இணைந்து நட்புறவை உண்டாக்க முடியும் என்ற செய்தி உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரம்ப்பின் பயணம் தீவிரவாதத்துக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளுடான அமெரிக்காவின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்" என்றார்.
முன்னதாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு முஸ்லிம் நாடுகளுக்கு (ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான், சிரியா) எதிராக குடியுரிமை கொள்கை மாற்றம், விசா தடை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளும், அமெரிக்க நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் இஸ்ரேல், சவுதிக்கு ட்ரம்ப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது கவனிக்கத்தக்கது.