சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூன் 
உலகம்

உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: பதிலடி கொடுக்கப்படும் என சீனா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பெய்ஜிங்: சீனாவின் உளவு பலூன் என்று அறியப்பட்டு வந்த பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதோடு இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் மேலே சீனாவின் உளவு பலூன் ஒன்று பறப்பதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. அந்த பலூன் நிச்சயம் ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் மக்களின் நலன் கருதி இந்த உளவு பலூனை சுடவில்லை என்றும் அமெரிக்கா கூறியது. பலூன் விவகாரத்தால் அமெரிக்கா - சீனா இடையே விரோதப் போக்கு மேலும் அதிகரித்து வந்தது. அது உளவு பலூனே அல்ல தனியார் வானிலை ஆய்வகத்தின் பலூன் என்று சீனா தெரிவித்தது. ஆனால் இந்த விளக்கத்தில் அமெரிக்கா சமாதானமடையவில்லை. சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் தனது பயணத்தை ரத்து செய்தார். அதிபர் பைடனுக்கு சீன பலூன் பற்றி ராணுவம் தொடர்ந்து தகவல்களைக் கொடுத்து வந்தது.

இந்த நிலையில் தெற்கு கரோலினா மாகாணத்தில் பறந்த சீனாவின் உளவு பலூனை அமெரிக்க ராணுவம் இன்று சுட்டு வீழ்த்தியது. நிலப்பரப்பின் மீது பறந்த பலூன் கடல்பரப்பின் மேலே செல்லும்வரை காத்திருந்து அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் பைடன் கூறும்போது, "அவர்கள் அதை வெற்றிகரமாக அகற்றினர். இதனை செய்த எங்கள் விமானிகளை நான் பாராட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். அமெரிக்க ராணுவத்தால் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இந்த நடவடிக்கையை, “சட்டபூர்வமான நடவடிக்கை" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இது சர்வதேச நடவடிக்கையை மீறிய செயல் என்று சீனா விமர்சித்துள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரிக்கும் மோதல்: அமெரிக்காவைவிடவும் வலுவான பொருளாதாரமாக வளரும் சாத்தியங்களுடன் சீனா இருந்து வருகிறது. உலக நாடுகளின் சூப்பர் பவராக நினைத்துக்கொள்ளும் அமெரிக்கா அதற்குப் போட்டியாக வளரும் சீனாவின் வளர்ச்சியை விரும்பவில்லை. மேலும் சீனா - அமெரிக்கா இடையே சர்வதேச அரங்கில் வர்த்தக போட்டி வலுவாக மாறி உள்ளது. இதன் எதிரொலிதான் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா அவ்வப்போது எடுத்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT