உலகம்

காயமடைந்த மூளையின் நினைவுகளை மீட்க புதிய முறை: அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

காயமடைந்த மூளையின் நினைவுகளை மீட்டெடுக்க புதிய முறையை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி அமைப்பு கண்டறிந்துள்ளது. இதற்காக அந்த அமைப்புக்கு 4 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.240 கோடி) பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு நவீன ஆய்வுத்திட்ட முகமை (டிஏஆர்பிஏ), நினைவுகள் மீட்டெடுப்பு திட்ட மேலாளர் ஜஸ்டின் சான்செஸ் கூறியதாவது:

கடந்த 2000-வது ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களும், ஆண்டு தோறும் 17 லட்சம் அமெரிக்க மக்களும் மூளை காயமடைவதால் தங்களின் நினைவுகளை இழக்கின்றனர். அவர்களின் நினைவுகளை மீட்டெடுப்பது அவசியம். குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு இதுபோன்ற சூழல்களில் அடிப்படை நிகழ்வுகள், இடங்கள் உள்ளிட்ட நினைவுகள் மங்கிவிடுகின்றன.

தேசத்துக்காக உழைத்த அவர்களின் நினைவுகளைத் திரும்ப மீட்பதே இத்திட்டத்தின் நோக்கம். இப்புதிய முறையின்படி, சிறிய கருவியொன்று, பாதிக்கப்பட்ட மூளையிலுள்ள இடைவெளியை நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இக்கருவி அடிப்படை நினைவுகளை மீட்டெடுக்கும். இந்நடைமுறை ஓரளவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், இதனை மக்களிடம் முழுமையாக நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில் ஏராளமான இடையூறுகள் உள்ளன. மிக விரைவில் இந்த நடைமுறை முழுமையாக சாத்தியமாகும் என்றார் அவர்.

அதிபர் பராக் ஒபாமா இந்த ஆய்வுத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT