உலகம்

’மலேசிய விமானத்தில் 6 எய்ட்ஸ் மாநாட்டுப் பிரதிநிதிகள் தான் சென்றனர்’

செய்திப்பிரிவு

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்க 6 பிரதிநிதிகள் மட்டுமே சென்றதாகவும், 100 பேர் சென்றதாக வந்த தகவல், தவறு என்றும் தெரியவந்துள்ளது.

20-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. சுமார் 12,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இம் மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ராக் பாடகரும் ஏழ்மைக்கு எதிராக போராடி வருபவருமான பாப் கெல்டாப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச மாநாட்டில் எய்ட்ஸுக்கு எதிரான பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நிதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இம்மாநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர், சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

மாநாட்டுப் பிரதிநிதிகள் சுமார் 100 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக, சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேடு தெரிவித்தது.

ஆனால், சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற 6 பிரதிநிதிகள் அல்லது அதற்கும் கூடுதலாக சிலர் மட்டுமே, எம்.எச் 17 விமானத்தில் சென்றதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐ.நா.வின் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டு தலைவர், மிச்சேல் சிதிபே, தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT