நடனம் ஆடிய அஸ்தியாஜ் மற்றும் அமீர் 
உலகம்

ஈரான்: பொதுவெளியில் நடனம் ஆடிய இணையருக்கு 10 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

தெஹ்ரான்: பொதுவெளியில் நடனம் ஆடிய இணையருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஈரான் நீதிமன்றம் விதித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பொது சதுக்கத்தின் முன் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும் நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். மேலும், இந்த வீடியோவில் அஸ்தியாஜ், ஹிஜாப் அணியாமல் இருந்தார்.

ஈரானில் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடக் கூடாது என்று கூறப்படும் நிலையில், அஸ்தியாஜ் மற்றும் அமீர் முகமது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இருவருக்கும் ஈரான் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்தச் செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையிலும், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT