உலகம்

தீவிரவாதிகளுக்கு நிதியுதவியை தடுக்க வளைகுடா நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

பிடிஐ

லஷ்கர் இ தொய்பா, தலிபான், ஐஎஸ், அல்காய்தா, ஹக்கானி நெட்வொர்க் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பதற்காக அமெரிக்கா மற்றும் 6 வளைகுடா நாடுகள் கைகோர்த்துள்ளன.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன் சிலில் (ஜிசிசி) இடம்பெற்றுள்ள 6 நாடுகள் இடையே ரியாத்தில் கையெழுத்தானது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க சவுதி அரேபிய பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஒப்பந்தப்படி, தீவிரவாத அமைப்புகள் எங்கிருந்து எந்த வகையில் நிதி பெறுகின்றன என்பதை கண்டறிந்து அதை தடுப்பது மற்றும் அது தொடர் பான தகவல்களை உறுப்பு நாடுகளிடையே பகிர்ந்து கொள்வது, உறுப்பு நாடுகளின் கடமையாகும்.

அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் இஸ்ரேல் சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவைச் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று மேற்கு கரைக்குச் சென்றார். அங்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸைச் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது டொனால்டு ட்ரம்ப் கூறியபோது, “இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க அமெரிக்கா உதவும். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்பட்டால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கில் அமைதி திரும்பும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT