பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள நீதிக்கான சீக்கிய அமைப்பு, அந்நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு மனு அனுப்ப முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் மாத இறுதியில் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்கா வரும்படி அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை இந்திய பிரதமர் அலுவலகமும் ஏற்றுக்கொண்ட நிலையில், அமெரிக்காவில் இருக்கும் நீதிக்கான சீக்கிய அமைப்பினர், பிரதமர் நரேந்திர மோடியின், அமெரிக்க வருகையை ரத்து செய்ய வேண்டும் என்று வெள்ளை மாளிகைக்கு இணையம் வழியாக மனு ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளது.
"இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளை மாளிகையில் உரை நிகழ்த்த அழைப்பதற்கு பதிலாக, இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மீது வன்முறை நடக்க காரணமாக இருந்த மோடியையும் பாஜகவையும் தடை செய்ய வேண்டும்.
1984 ஆம் ஆண்டு பொற்கோயிலில் ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் 2008 ஆம் ஆண்டு ஒடிசாவில் கிருஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு பாஜகவே காரணம்" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிரான இந்த மனுவுக்கு, வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள், ஒரு லட்சம் பேரின் கையெழுத்து ஆதரவை பெற வேண்டும். அதன் பின்னரே இந்த மனு மீது வெள்ளை மாளிகை கவனம் கொண்டுவரப்படும் என்பதால், சீக்கிய அமைப்பு அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' இதற்கு முன்னர், 1984 ஆம் வருடம் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கலவரத்தை தூண்டிவிட்டதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் இதே அமைப்பால் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.