காஸாவில் பொதுமக்களை இஸ்ரேல் கொல்லக்கூடாது எனவும், உலகம் முழுவதிலும் இருந்து மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தாலும், காஸாவின் மீது இஸ்ரேல் தரை வழித் தாக்குதலில் இறங்கியிருப்பதைக் கண்டு கவலையடைகிறேன் என்று ஐக்கிய நாடுகள் மன்ற பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
மூன்று இஸ்ரேல் இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்துள்ளது இஸ்ரேல். கடந்த 10 நாட்களாக வான் வழியாகவும், கடல் வழியாகவும் வெடிகுண்டுகள் வீசித் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல், வியாழக்கிழமை முதல் ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காஸா பகுதியின் மீது தரை வழியாகவும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 260 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,920 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்த முயற்சியில் எகிப்து ஈடுபட்டது. ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு முன்வந்தபோதும் ஹமாஸ் இயக்கத்தினர் முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தினர் மீது கடும் விமர்சனங்களை எகிப்து முன்வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், ‘ஏற்கெனவே ஆபத்தான நிலையில் இருந்த போர் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளது. பொதுமக்களைக் கொல்வதிலிருந்து இஸ்ரேல் விலகியிருக்க வேண்டும். போரின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது' என்று தெரிவித்துள்ளார்.