உலகம்

உலக மசாலா: 56 மொழிகள் அறிந்த அசகாயசூரர்!

செய்திப்பிரிவு

முகமது மெசிக் 56 மொழிகளைச் சரளமாகப் பேசவும் 14 மொழிகளைப் புரிந்துகொள்ளவும் கூடியவராக இருக்கிறார்! யுகோஸ்லாவாகியாவைச் சேர்ந்த முகமதுவுக்கு 5 வயதிலேயே மொழிகளை வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறன் வந்துவிட்டது. “ஐந்து வயதில் கிரேக்க நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். எனக்கு அறிமுகம் இல்லாத மொழி பேசுபவர்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தேன். சுற்றுலாவின் இறுதி நாளில் கார் ரிப்பேர் ஆகிவிட்டது. டிரைவர், மெக்கானிக் ஆகியோருடன் கிரேக்க மொழியில் நான் பேசியதைக் கண்டு என் குடும்பமே அதிர்ந்து போனது. என் அப்பா அலுவலக ரீதியாகப் பல நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித் தேன். உறவினர்கள் பல நாடுகளில் இருந்ததால், அங்கும் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் அப்பா. மருத்துவப் பரிசோதனையின் முடிவில், எனக்கு ஒருவகையான ஆட்டிசம் குறைபாடு கொஞ்சம் இருக்கிறது என்றும், அந்தக் குறைபாடு சில நேரங்களில் தற்செயலாக மொழிகளை எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றலை வழங்குகிறது என்றும் தெரிய வந்தது. என்னுடைய திறமையை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் புதுப் புது மொழிகளைக் கற்றுக்கொடுக்க முன்வந்தனர். சிலவற்றை நானே தேடிச் சென்று கற்றுக்கொண்டேன். இரண்டே வாரங்களில் யூ டியூப், 2 புத்தகங்கள், 43 கார்ட்டூன்கள் மூலம் பால்டிக் மொழியைக் கற்றுக்கொண்டேன். ஒரு சில மொழிகளைக் கற்றுக்கொண்டால், அவற்றுடன் கொஞ்சம் வித்தியாசப்படும் பல மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். வருடத்தில் 200 நாட்கள் விமானத்தில் பறந்துகொண்டே இருக் கிறேன். பல்வேறு நாடுகளில் விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி என்று ஓடிக்கொண்டே இருக்கிறேன். 56 மொழிகள் இன்று எனக்குத் தெரிந்தாலும் எல்லா மொழிகளையும் அடிக்கடி பயன்படுத்தும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஒரு மொழி அழியும்போது மனிதன் ஒப்பற்ற செல்வத்தை இழக்கிறான்” என்கிறார் முகமது மெசிக்.

56 மொழிகள் அறிந்த அசகாயசூரர்!

அமெரிக்காவில் வசிக்கும் 82 வயது பால் ரஸ்ஸல், மறதி நோயால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் வளர்த்த ஹைடி பூனையை, உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். ஆனால் அங்கிருந்து வெளியேறி, ரஸ்ஸல் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டது ஹைடி. அருகில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டு, பூட்டிய வீட்டையே சுற்றி வந்துகொண்டிருந்தது. ஓராண்டுக்குப் பிறகு ரஸ்ஸல் வீடு திரும்பினார். “என் படுக்கையை விட்டு எழுந்தபோது, கம்பளத்தில் ஒரு விநோத உருவத்தைக் கண்டு பயந்து போனேன். ஆனால் அது அமைதியாக இருந்தது. பிறகுதான் ஹைடி என்று தெரிந்தது. முகத்தைத் தவிர, உடல் முழுவதும் அடர்த்தியாக முடிகள் வளர்ந்து சடைகளாக மாறியிருந்தன. பூனையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, மயக்க மருந்து கொடுத்து, முடிகளை வெட்டினோம். ஒரு கிலோ முடியுடன் இவ்வளவு நாளும் சிரமப்பட்டிருக்கிறது ஹைடி” என்கிறார் ரஸ்ஸல்.

பாவம் பூனை…

SCROLL FOR NEXT