உலகம்

பாகிஸ்தானின் அபோதாபாத் அருகே விமான விபத்தில் 47 பேர் பலி

ஏபி, ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்

பாகிஸ்தானின் அபோதாபாத் அருகே மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த விமானம் வெடித்துச் சிதறியதில் ஊழியர்கள் உட்பட அதில் பயணம் செய்த 47 பேரும் பலியாயினர்.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் (பிகே-661) கைபர்-பக்துன்கவா மாகாணத்தின் சித்ரல் நகரிலிருந்து இஸ்லாமாபாத் நகருக்கு நேற்று மாலை 3.30 மணிக்கு புறப்பட்டது. இதில் பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜுனைத் ஜாம்ஷெட் மற்றும் 2 வெளிநாட்டினர் உட்பட 42 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்தனர்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ராடாரிலிருந்து மறைந்தது. அப்போதாபாத் மாவட்டம் ஹவேலியன் நகருக்கு அருகே படோலா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது.

இதையடுத்து ராணுவமும் ஹெலிகாப்டர்களும் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமானத்தின் உடைந்த பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளதாகவும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT