உலகம்

பாகிஸ்தான் பெண்ணை மணந்தார் தாவூத் இப்ராஹிம்: என்ஐஏவிடம் உறவினர் தகவல்

செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டு பின்னர் நாட்டிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக என்ஐஏ விசாரணையின்போது அவரது உறவினர் தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராஹிம்மின் உறவினரான அலிஷா பார்காரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

அலிஷா பார்கர் விசாரணை அதிகாரிகளிடம் தாவூத் இப்ராஹிமின் குடும்ப உறவுகளைப் பற்றி முழுமையாக விவரித்துள்ளார். தாவூத்தின் முதல் மனைவி இப்போது அவருடைய சொந்தங்களுடன் வாட்ஸ் அப் கால்கள் வழியாக மட்டும் பேசுகிறார் என்று அலிஷா தெரிவித்துள்ளார். மேலும், தாவூத் இப்போது கராச்சி நகரில் முன்பிருந்து இடத்தில் இல்லை வேறு இடத்திற்கு சென்றுவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

தலைவர்களைக் குறிவைக்கும் தாவூத்: தாவூத் இப்ராஹிம் இந்தியாவின் முக்கியமான தலைவர்கள், தொழிலதிபர்களை தாக்க தனியாக ஒரு குழு அமைத்து சதித் திட்டம் தீட்டிவருவதாக வந்த தகவலையடுத்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் தான் தாவூத்தின் சகோதரி ஹஸீனா பார்கரின் மகன் அலிஷா பார்க்கரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர் அளித்த தகவலின்படி, தாவூத்துக்கு மொத்தம் 4 சகோதரர்கள், 4 சகோதரிகள் உள்ளனர். அவரையும் சேர்த்து அவர் வீட்டில் மொத்தம் 9 பிள்ளைகள். தாவூத் இப்போது பாகிஸ்தானி பதான் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை 2வது மனைவியாக திருமணம் செய்துள்ளார்.

துபாயில் ஜூலை 2022-ல் தாவூத் அவரது முதல் மனைவி மைசாபினை சந்தித்துளார். துபாயில் சைதூன் ஹமீது அண்டுலேவின் இல்லத்தில் தாவூத் தங்கியுள்ளார். இப்போது கராச்சியில் அப்துல்லா காசி பாபா தர்காவின் பின்னால் உள்ள ஒரு பகுதியில் தாவூத் வசிக்கிறார்.

தாவூத்திற்கு முதல் மனைவி வாயிலாக மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முதல் மகள் பெயர் மாருக் இவர் ஜாவேத் மியாண்டட் மகன் ஜுனைத்தை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகள் பெயர் மெஹ்ரின், மூன்றாவது மகள் பெயர் மாஸியா. தாவூத்தின் மகன் பெயர் மோஹின் நவாஸ். தாவூத் அவரது முதல் மனைவியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இவ்வாறாக குடும்பம் பற்றி அலிஷா பார்க்கர் பல்வேறு தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT