இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அவலச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.150, ஒரு கிலோ அரிசி ரூ.165, ஒரு கிலோ மைதா ரூ.135, ஒரு கிலோ பருப்பு ரூ.180, ஒரு கிலோ டீ தூள் ரூ.1100, ஒரு கிலோ சக்கரை ரூ.86, ஒரு லிட்டர் பால் ரூ.140, ஒரு லிட்டர் தயிர் ரூ.115, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ரூ.480, ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூ.500, ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.1100, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.370, ஒரு டசன் முட்டைகள் ரூ.400... பாகிஸ்தானின் அத்தியாவசியப் பொருட்களுக்கான இன்றைய விலை இவை.
உணவுப் பொருள் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதற்கேற்ப விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்து கொண்டே வருகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபவர் பக்துன்வா என எல்லா மாகாணங்களிலும் மக்கள் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இதனால், பொது இடங்களில் விநியோகிக்கப்படும் இலவச உணவுகளைப் பெறுவதற்காக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அந்த நாட்டின் கோர காட்சிகளை வெளிப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானில் பொது இடம் ஒன்றில் விநியோகிக்கப்பட்ட பிரியாணியைப் பெறுவதில் பெருங்கூட்டம் கூடியதில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் கோதுமை தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அந்நாட்டு அரசு ஏழைகளுக்காக மலிவு விலையில் கோதுமை வழங்கி வருகிறது. இவற்றை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்லும் வீடியோ இது...
#BreakingNews #BREAKING
It is very sad to see #Pakistan falling into the gutter while fighting for flour.
உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்டால் மக்கள் எவ்வாறு அதன் பின்னே ஓடுகிறார்கள் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
உணவுப் பொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் மயங்கி விழும் கோர காட்சி இது.
குழந்தைகளுக்குக் கொடுப்பதற்குக் கூட எதுவும் இல்லை என பெண்மணி ஒருவர் வேதனையுடன் கூறும் வீடியோ இது.
திவாலாக வாய்ப்பு: பாகிஸ்தானில் கோதுமை மாவு வாங்க ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 3 வாரங்களில் அந்த நாடு திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூனில் பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பயிர் சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த அக்டோபரில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறை ஈடு செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 3 வாரங்கள் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வது கேள்விக்குறியாகி இருக்கிறது. பாகிஸ்தான் முழுவதும் கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.