பெர்லின் தாக்குதலுக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்பட்ட நபரை இத்தாலி போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கைசர் வில்ஹெம் நினைவு சர்ச் அருகே மிகப் பெரிய கிறிஸ்துமஸ் சந்தை அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த திங்கட்கிழமையன்று இந்த சந்தை விழாக்கோலம் பூண்டிருந்தது.
அப்போது ஸ்டீல் கம்பிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று சந்தைக்குள் தாறுமாறாக ஓடியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.
இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வந்த நிலையில், பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலை எங்களது படை வீரர்தான் நிகழ்த்தினார் என்று ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதலை துனிசியாவைச் சேர்ந்த நபர் நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், பெர்லின் தாக்குதல் தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று இத்தாலியில் உள்ள மிலன் நகரில் துனிசியாவைச் சேர்ந்த அனிஸ் அம்ரி (24) என்ற நபரை போலீஸார் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸார் தரப்பில் வெளியிட்ட தகவலில், "இத்தாலியின் மிலன் நகரில் வழக்கமான வாகனப் பரிசோதனையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது காரில் அமர்திருந்த அனிஸ் அம்ரி தன்னிடமிருந்த துப்பாக்கியால் போலீஸார் மீது சுட்டார். போலீஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் அனிஸ் கொல்லப்பட்டார். இந்தச் சண்டையில் போலீஸார் இருவருக்கு காயம் ஏற்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.