உலகம்

சீனாவில் மதத் தீவிரவாத வீடியோக்களை பகிர்ந்த 32 பேருக்கு சிறைத் தண்டனை

செய்திப்பிரிவு

சீனாவில் மதத் தீவிரவாதிகளின் வன்முறை வீடியோக்களை டவுன்லோடு செய்து பரப்பியதாக, 32 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள சில மாகாணங்களில் சமீபகாலமாகவே மதத் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் போக்கை தடுப்பதற்கான பல கட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 40 சமூக விரோத குழுக்களை தீவிரவாதக் குழுக்களாக சீன அரசு அறிவித்திருந்தது. மேலும், மொத்தம் 400 பேரை தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர்களாகவும், அத்தகைய செயல்களில் ஈடுப்பட்டவர்கள் என்று கூறி கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தீவிரவாதத்தை மக்களிடையே பரப்பும் நோக்கத்தில், மதத் தீவிரவாதிகளின் வன்முறைகள் அடங்கிய வீடியோ பதிவுகளை டவுன்லோடு செய்து இணையம் மற்றும் செல்போன் வாயிலாக பரப்பியதாக சிலரை சீன காவல்துறை கைது செய்தது.

இது தொடர்பான வழக்குகள் சின்ஜியாங் மண்டல தலைநகர் ஊரும்கி, அக்சு, டர்பன் மற்றும் கோடன் என பல்வேறு நீதிமன்றங்களில் நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், மதத் தீவிரவாதத்தைப் பரப்பிய குற்றத்துக்காக, 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 29 பேருக்கு 4 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதித்து சீன நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன.

SCROLL FOR NEXT