உலகம்

பிரிட்டன் பத்திரிகையின் மன்னிப்பை ஏற்க ஜார்ஜ் குளுனி மறுப்பு

செய்திப்பிரிவு

பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை மன்னிப்பு கேட்டுள்ளதை ஏற்க ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளுனி மறுத்துவிட்டார்.

இங்கிலாந்தை சேர்ந்த வழக்கறிஞர் அமால் அலாமுதீனை ஜார்ஜ் குளுனி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் தாங்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதை உறுதி செய்து நிச்சயதார்த்தம் நடத்தினர். ஜார்ஜ் குளுனிக்கு இப்போது 53 வயதாகிறது. அமால் அலாமுதீன் வயது 36.

இந்நிலையில் சமீபத்தில் டெய்லி மெயில் பத்திரிகை ஜார்ஜ் குளுனி – அமால் அலாமுதீன் தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டது.

அதில் ஜார்ஜ் குளுனியை தனது மகள் திருமணம் செய்து கொள்வதை அமால் அலாமுதீனின் அம்மா பாரியா விரும்பவில்லை. தங்களது டுரூசி மதத்தை சேர்ந்தவரைத்தான் அமால் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்புகிறார் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. டுரூசி என்பது முஸ்லிம் மதத்தின் ஓர் உட்பிரிவாகும். லெபனான், சிரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் டுரூசி முஸ்லிம்கள் உள்ளனர்.

டெய்லி மெயில் பத்திரிகையின் இந்த கட்டுரைக்கு ஜார்ஜ் குளுனி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தங்கள் திருமணத்தில் மதப் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை. டெய்லி மெயில் வெளியிட்டுள்ள கட்டுரை முழுவதும் கட்டுக் கதை என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தாங்கள் வெளியிட்ட கட்டுரைக்காக டெய்லி மெயில் பத்திரிகை மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் லெபனானில் இருந்து கிடைத்த உண்மை தகவல்களின் அடிப்படையில்தான் நாங்கள் கட்டுரை வெளியிட்டோம் என்று டெய்லி மெயில் கூறியுள்ளது. எனினும் இதனை ஏற்க ஜார்ஜ் குளுனி மறுத்துள்ளார்.

SCROLL FOR NEXT