சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஐ.நா. சபையை சீர்திருத்தவும், நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண தனிப்பட்ட முறையில் பங்காற்றவும் உறுதியேற்பதாக, ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பதவிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்டோனியோ கட்டரஸ் கூறியுள்ளார்.
ஜனவரி 1-ம் தேதி பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க உள்ள அன்டோனியோவுக்கு ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் பீட்டர் தாம்ஸன் திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, அன்டோனியோ அளித்த 5 உறுதிகள்:
* ஐக்கிய நாடுகள் சபை, சுறுசுறுப்பாகவும், திறமையாகவும், பயனுள்ள வகையிலும் செயலாற்ற வேண்டும்.
* ஐ.நா. சபையின் செயல்பாடுகளில் அதிகாரிகளை விட, மக்களுக்கு அதிகம் முக்கியத்துவம் காணப்பட வேண்டும்.
* திட்டங்களை மேற்கொள்ளும் போது, அவற்றுக்கான நடைமுறைகளை விட, விளைவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* சர்வதேச அளவில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கேற்ப ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதும் அவசியமாகிறது. அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
* உலகளவில் நீண்ட காலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தனிப்பட்ட முறையில் எனது பங்களிப்பை வழங்குவேன் என உறுதி அளிக்கிறேன்.
ஆன்டோனியோ குறித்து...
ஐநா சபையின் 9-வது பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் அன்டோனியோ, 1995 முதல் 2002-ம் ஆண்டு வரை, போர்ச்சுகலின் பிரதமராகவும், 2005 முதல் 2015-ம் ஆண்டு வரை அகதிகளுக்கான ஐநா தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஐநா பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த பான் கீ மூன், இம்மாத கடைசியில் ஓய்வு பெறுகிறார். இவரைத் தொடர்ந்து, இப்பதவிக்கு போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டரஸ் கடந்த அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்டார்.