ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் விமானப்படைக்கு சொந்தமான பேருந்தின் மீது தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படையினர் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 8 ராணுவ அதிகாரிகள் பலியாயினர்.
இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெனரல் ஜாகிர் அஸிமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காபுல் (மேற்கு) நகரில் ராணுவத்துக்கு சொந்தமான விமானப்படை பேருந்து புதன்கிழமை காலையில் ராணுவ அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி பேருந்து மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் பேருந்தில் பயணம் செய்த 8 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த 13 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் பொதுமக்கள்" என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் நடந்து சென்று, பேருந்தை நெருங்கியதும் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக அந்த அமைப்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலுக்குப் பிறகு தலைநகர் காபுலில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. எனினும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
இதற்கு முன்பு கடந்த ஜூன் 7-ம் தேதி அதிபர் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவை குறிவைத்து காபுலில் நடைபெற்ற தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். எனினும் அவர் தாக்குதலிலிருந்து தப்பி விட்டார்.