சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகர் மீது துருக்கி விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 88 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவின் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. இதில் அல்-பாப் என்ற நகரைக் குறிவைத்து துருக்கி விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 88 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 72 பேர் நகர மக்கள் ஆவர். 21 பேர் குழந்தைகள் என்று சிரியா மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சிரியாவில் துருக்கிக்கு ஆதர வான கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகிறது. அந்த கிளர்ச்சி படைக்கு ஆதரவாகவே துருக்கி ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
துருக்கி ராணுவ தாக்குதலுக்கு அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குடியரசு மக்கள் கட்சித் தலைவர் கெமல் கூறியபோது, சிரியாவில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சிரியா அதிபர் ஆசாத்தின் படைகள் சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளின் தலைமையிடமான அலெப்போ நகரைக் குறிவைத்து ஓராண்டுக்கும் மேலாக தீவிர போரில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் அந்த நகரம் முழுவதும் அதிபர் ஆசாத் படை யின் கட்டுப்பாட்டின் கீழ் வந் துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைக்கு இது மிகப்பெரிய வெற்றி என்று வர்ணிக்கப்படுகிறது. சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 3.1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐஎஸ் வீடியோ வெளியீடு துருக்கியில் இணைய சேவை முடக்கம்
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள அல்-பாப் நகரை கைப்பற்ற துருக்கி ராணுவம் தரை, வான் மார்க்கமாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் தரை போரில் ஈடுபட்டிருந்த 2 துருக்கி வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் சிறை பிடித்தனர். இருவரையும் உயிரோடு எரித்து கொலை செய்து அந்த வீடியோவையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.கொடூரமான அந்த வீடியோ துருக்கி நாட்டின் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ பரவாமல் தடுக்க இணையதள சேவையை துருக்கி அரசு முடக்கியுள்ளது. இதனால் அங்கு யூ டியூப், ட்விட்டர், பேஸ்புக் போன்றவை செயல்படவில்லை.சில நாட்களுக்கு முன்பு துருக்கி தலைநகர் அங்காராவில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த வீடியோ இணையத்தில் பரவாமல் தடுக்க அப்போதும் துருக்கியில் இணையதள சேவை முடக்கப்பட்டது.