உலகம்

சவுதியில் பர்தா அணியாமல் புகைப்படம் ட்வீட் செய்த பெண் கைது

பிடிஐ

சவுதி அரேபியாவில் பர்தா அணியாமல் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த மலக் அல் ஷெஹ்ரி என்ற பெண், சவுதியின் மிகப் பிரபலமான ரியாத் காஃபி ஷாப்புக்கு அருகே பர்தா அணியாமல் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து அந்தப் பெண் பொது இடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிமுறைகளை மீறிவிட்டார் என்று கூறி சவுதி போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து சவுதி போலீஸ் செய்தி தொடர்பாளர் ஃபவாஸ் அல் மைமன் கூறும்போது, "சவுதியை பொறுத்தவரை இங்கு சட்டங்கள், விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண் பர்தா அணியாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பதிவேற்றிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அந்தப் பெண் தனக்கு அறிமுகமில்லாத ஆண்களோடு பேசும் பழக்கம் உடையவர்.

இப்பெண்ணின் மீதான இந்த நடவடிக்கை இஸ்லாமிய விதிமுறைகளை கடைப்பிடிப்பதை பொதுமக்களிடையே வலியுறுத்தும்" என்று கூறினார்.

தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கப்பட்ட (பர்தா) ஆடையையே பொது இடங்களில் அணிய வேண்டும் என்பது விதி.

சவுதியைப் பொறுத்தவரை பெண்களுக்கான கடுமையான விதிமுறைகள் கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது.

சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT