உலகம்

விமானத்தில் ட்ரம்ப் மகளுடன் தகராறு: பயணி வெளியேற்றம்

பிடிஐ

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பிடம் விமானத்தில் தகராறு செய்த சக பயணி வெளியேற்றப்பட்டார்.

நியூயார்க்கிலுள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், வியாழக்கிழமை ட்ரம்ப்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பும் அவரது கணவரும் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு செல்வதற்காக பயணியர் விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

அப்போது இவன்கா ட்ரம்பின் பக்கத்து இருக்கையில் அமர மாட்டேன் என்று சக பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின் விமான அதிகாரிகள் வந்து அந்தப் பயணியை விமானத்திலிருந்து வெளியேற்றினர். இதனால் சில மணி நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நபர், "உங்கள் தந்தை (ட்ரம்ப்) இந்த நாட்டை பாழாக்கினார். நீங்கள் தற்போது இந்த விமானத்தை பாழாக்கவுள்ளீர்" என கூறியதாக சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட பயணியின் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து பதிவிட்டிருக்கிறார் அதில், "எனது கணவர் அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ட்ரம்ப் தரப்பில், இது "துரதிருஷ்டவசமானது" என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT