உலகம்

சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

ராய்ட்டர்ஸ்

சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை நடத்த கூட்டத்தில் புதின் பேசும்போது, "சிரிய அரசுக்கும், கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே டிசம்பர் 30 நள்ளிரவில் போர் நிறுத்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் இருதரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று சிரியாவில் அமைதி உண்டாக வழிவகுக்கும். இதன்பிறகு சிரியாவில் ரஷ்ய படைகள் படிப்படியாக குறைக்கப்படும்" என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதினுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கி ஷோய்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ்வும் உடனிருந்தனர்.

புதினின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக சிரிய அரசின் செய்தி நிறுவனமான சானா இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

சிரிய போர்

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வந்தது.

அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு கிளர்ச்சிப் படைகள் செயல்பட்டு வந்தன. அந்த நகரின் மீது போரைத் தீவிரப்படுத்தியுள்ள அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியது.

SCROLL FOR NEXT