கோப்புப் படம் 
உலகம்

ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவை ஈரான் கலைத்ததை நம்ப மறுக்கும் அமெரிக்கா

செய்திப்பிரிவு

தெஹ்ரான்: ஈரான் அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளதாக கூறப்படுவதை நம்ப முடியவில்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்

இந்த நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சம் தரப்பில், “பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் ஈரான் அரசின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரான் மக்கள் சுதந்திரமாகவும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழ விரும்புகிறார்கள். அறநெறி காவல் துறையை கலைத்துள்ளீர்கள் என்றால், அதில் மீண்டும் மாற்றத்தை கொண்டுவராதீர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பெண்களின் உடை மற்றும் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் நீக்காவிட்டால், ஈரானின் இந்த சமீபத்திய நடவடிக்கை விளம்பர நடவடிக்கைதான்” என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

          
SCROLL FOR NEXT