தலிபான்களுக்கு ரஷ்யா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க கூட்டுப் படைகள் பக்கபலமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தலிபான்களுக்கு ரஷ்யா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் தலிபான்களின் பிரதிநிதிகள் மாஸ்கோ மற்றும் தஜிகிஸ்தானில் அண்மையில் சந்தித்துப் பேசியிருப்பதாக ஆப்கானிஸ்தான் உளவுத் துறை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜான் நிக்கல்சன் கூறியபோது, ரஷ்யாவின் ஆயுத உதவி ஆபத்தான பாதைக்கு வழிவகுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ரஷ்ய அரசு மறுத்துள்ளது. ஆப் கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கூறியபோது, எந்தவொரு தீவிரவாத அமைப் புக்கும் ரஷ்யா ஆதரவு அளிப்பது இல்லை என்று தெரிவித்தார்.