உலகம்

உலக மசாலா: முதுமையில் தனிமை கொடுமை...

செய்திப்பிரிவு

சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனால் இன்று முதியவர்களுக்கு தனிமையும் மன அழுத்தமும் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளன.

ஜெங்ஜோவ் பகுதியைச் சேர்ந்த 63 வயது லி யான்லிங், சமூக வலைதளத்தில் உருக்கமாக ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் “நான் தனிமையில் இருக்கிறேன். 19-24 வயதுடைய அன்பான பெண்கள் யாராவது என்னுடன் அரட்டையடிக்கவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் முன்வருவீர்களா? இந்தக் குளிர்காலத்தில் நான் தனியாகப் பயணம் மேற்கொள்ள பயமாக இருக்கிறது. என்னுடன் சில நாட்களைச் செலவிடும் பெண்ணுக்குத் தேவையான பணம் கொடுத்துவிடுகிறேன். அத்துடன் புதிய ஐபோன் 7 ஒன்றையும் அன்பளிப்பாகத் தருகிறேன். எனக்குத் தேவை என் மகளைப் போல அன்பும் அரவணைப்பும்தான்” என்று கூறி, புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார் லி யான்லிங்.

கடிதத்தைப் படித்த பெண்கள் பணமோ, பரிசோ வேண்டாம், உங்களுடன் பயணிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்கள். லி யான்லிங்கின் கணவர், தன் நண்பர்களுடன் அடிக்கடி சுற்றுலா சென்று விடுகிறார். இவரது மகள் கனடாவில் வசிக்கிறார். வீட்டில் தனியாக இருந்த லி யான்லிங், மிகவும் மன அழுத்தத்துக்குத் தள்ளப்பட்டார். அதிலிருந்து வெளிவருவதற்காகத் தானும் ஒரு துணையுடன் பயணம் கிளம்ப முடிவு செய்தார். குவிந்துள்ள விண்ணப்பங்களில் இருந்து, தன் மகளைப் போல இருப்பவர் ஒருவரைத் தேர்வு செய்ய இருக்கிறார் லி யான்லிங்.

முதுமையில் தனிமை கொடுமை…

ஸ்வீடன் மற்ற நாடுகளில் இருந்து குப்பைகளை இறக்குமதி செய்து, அவற்றை மறுசுழற்சி செய்து, தேவையான ஆற்றல்களைப் பெற்றுக்கொள்கிறது.

ஸ்வீடனில் பாதியளவு மின்சாரம், மரபுசாரா ஆற்றல்களில் இருந்தே கிடைக்கின்றன. 1991-ம் ஆண்டு முதல் மரபுசார் எரிபொருள்களுக்கு ஸ்வீடனில் அதிக அளவு வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாற்று எரிபொருள்களைத் தேடிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. குப்பைகளை மறுசுழற்சி செய்வதால், ஸ்வீடனில் 1 சதவிகிதம் கழிவுகளே நிலத்தில் கொட்டப்படுகின்றன. மற்றவை எல்லாம் ஆற்றல்களாக மாற்றப்பட்டு விடுகின்றன. இந்த ஆற்றல்களைக் கொண்டு ஸ்வீடனில் 2,50,000 வீடுகளுக்கு மின்சாரமும் 9,50,000 வீடுகளுக்குக் குளிர்காலத்தில் வெப்பமும் அளிக்கப்படுகின்றன.

“ஸ்வீடன் மக்கள் பொதுவாகவே சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர்கள். இயற்கை மீது நேசம் கொண்டவர்கள். குப்பைகளைக் குறைப்பதற்கும் முடிந்தவரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கும் தேவையான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். தவிர்க்க முடியாத குப்பைகளை மட்டுமே மக்கள் குப்பைத் தொட்டிகளில் கொட்டுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குப்பைகளைக் கொட்டுவதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதிகக் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால் அந்தக் குப்பைகளை இறக்குமதி செய்து, எங்களுக்குத் தேவையான ஆற்றல்களை எடுத்துக்கொள்கிறோம்” என்கிறார் ஸ்வீடனின் கழிவு மேலாண்மை மறுசுழற்சி அசோஷியேசன் இயக்குநர் அன்னா காரின் க்ரிப்வல்.

நாமும் ஸ்வீடனைப் பின்பற்றலாமே!

SCROLL FOR NEXT