இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் காயமடைந்ததால், மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இதனால், வடக்கு ஜாவாவில் சியாஞ்சூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் வாகன நிறுத்துமிடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.படம்: பிடிஐ 
உலகம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 62 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர். மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இங்குள்ள மேற்கு ஜாவா தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. (6.21 மைல்) ஆழத்தில் இதன் மையப்பகுதி காணப்பட்டது. 5.6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த சியாஞ்சூர் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சியாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இப்பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நிலநடுக்கத்துக்கு இதுவரை 62 பேர் இறந்ததாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இந்த நிலநடுக்கம் பல விநாடிகள் நீடித்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளில் இருந்து வெளியேறினர். எனினும், ஜகார்த்தாவில் கடும் சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

SCROLL FOR NEXT