உலகம்

116 பேருடன் விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மாலி அருகே கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

மாயமான ஏர் அல்ஜீரியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.எச்.5017 விமானத்தின் உடைந்த பாகங்கள் மாலி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் இருந்து அல்ஜீரிய தலைநகர் அல்ஜீரிஸுக்கு ஏ.எச்.5017 விமானம் நேற்று (வியாழக்கிழமை) புறப்பட்டது. கிளம்பிய சுமார் 50 நிமிடத்திலேயே விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையில் இருந்தும் விமானம் மறைந்துவிட்டது.

மேற்கு ஆப்பிரிக்காவின் வடக்கு மாலி பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் மாயமானது. அடுத்த சில மணி நேரத்திலேயே விமானம் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டது. எனினும் நொறுங்கி விழுந்த விமானத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் பர்கினோ பாசோ எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் மாலி நாட்டுக்கு உட்பட்ட கோஸி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பர்கினோ பாசோ ராணுவ ஜெனரல் கில்பர்ட் டிண்டியர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது விபத்தா அல்லது சதிச் செயலா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஏர் அல்ஜீரியா நிறுவனத்துக்கு சொந்தமான இந்த ஏ.எச்.5017 விமானத்தில் 110 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். பணியாளர்கள் 6 பேரும் ஸ்பெயிம் நாட்டவர்.

சமீப காலமாக நிகழ்ந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது இது விமானங்களுக்கு போதாத காலம் என்று கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் புதன் கிழமை மோசமான வானிலையால் தைவானில் விமானம் நொறுங்கி 51 பேர் உயிரிழந்தனர்.

கடந்த வாரத்தில் உக்ரைன் பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் கொல்லப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் மலேசிய விமானம் மாயமானதில் 239 பேரின் நிலை என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

SCROLL FOR NEXT