உலக அழகியாக கரீபியன் தீவு நாடான போர்ட்டோ ரிக்கோவை சேர்ந்த ஸ்டெபானி டெல் வாலே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
66-வது உலக அழகிப் போட்டி, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான ஆக்ஸன் ஹில் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கென்யா, போர்ட்டோ ரிக்கோ, இந்தோனேசியா, மொமினிகன் குடியரசு, பிலிப்பைன்ஸ் ஆகிய 5 நாடுகளின் அழகிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இதில் போர்ட்டோ ரிக்கோவை சேர்ந்த ஸ்டெபானி உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாம் இடத்தை மொமினிகன் குடியரசை சேர்ந்த யரீட்சா மிகுவலினா ரெயஸ் ரமிரெஸ், மூன்றாம் இடத்தை இந்தோனேசியாவைச் சேர்ந்த நடாஷா மேனுவலா பெற்றனர்.
உலக அழகிப் பட்டம் வென்ற ஸ்டெபானி கூறும்போது, “கரீபியன் தாயகத்தின் பிரதிநிதியாக செயல்பட இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரமாகவும் பொறுப்பாகவும் கருதுகிறேன்” என்றார்.
19 வயது மாணவியான ஸ்டெபானி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் சரளமாக பேசுகிறார். இவர் திரைப்படத் துறையில் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியதர்ஷினி சாட்டர்ஜி, முதல் 20 அழகிகள் பட்டியலில் இடம்பெற்றார். ஆனால் இதைத் தொடர்ந்து முதல் 10 அழகிகள் பட்டியலில் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை.