உலகம்

பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் மீண்டும் திரையிடல்

பிடிஐ

இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் ஏழு தீவிரவாத முகாம்களின் மீது அதிரடியாக துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் அத்து மீறி தாக்குதல் நடத்தியது..

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் நடிகர்களுக்கு பாலிவுட் படங்களில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் விநியோகஸ்தர்கள், திரைப்பட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்பட மாட்டாது என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சோஹாலி கான் இயக்கி, நவாசுதின் சித்திக் நடித்து செப்டம்பரில் 5-ல் வெளிவந்த ஃப்ரிக்கி அலி படம் இன்று (திங்கட்கிழமை) திரையிடப்பட்டது.

மேலும் கடந்த இரண்டு மாதங்களில் வெளிவந்த இந்திய திரைப்படங்களை வெளியிடவும் பாகிஸ்தான் விநியோகஸ்தர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பாகிஸ்தான் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சோரைஸ் லஷாரி கூறும்போது, "கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்திய மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் இந்திய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட மறுத்தோம். ஆனால் தற்போது கள யதார்த்தங்களை காண வேண்டியுள்ளது. எனவே இந்திய திரைப்படங்களைத் திரையிட்டுள்ளோம்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT