உலகம்

போர்க் குற்றம் பற்றி ஜெனீவாவில் விசாரணை: இலங்கை புலனாய்வு அதிகாரி உரிய பதில் அளிக்கவில்லை

பிடிஐ

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையின்போது, ஐநா கேள்விகளுக்கு இலங்கை அதிகாரி உரிய பதில் அளிக்கவில்லை.

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே நடந்து வந்த சண்டை கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வி அடைந்தது. இறுதிக்கட்ட போரின்போது ஒரே மாதத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் உட்பட 80 ஆயிரம் பேர் பலியான தாக ஐநா மதிப்பிட்டுள்ளது.

மேலும் ராணுவம் போர்க்குற்றத் தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் பற்றி விசாரிப்பதுடன் அங்கு சமரச முயற்சியை மேற்கொள்வது தொடர் பாக ஐநா மனித உரிமை கவுன்சில் கடந்த ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில், உறுப்பு நாடு களில் நிகழும் மனித உரிமை மீறல் களை கண்காணிப்பதற்கான ஐநா குழு, இலங்கை விவகாரம் குறித்த 2 நாள் விசாரணையை ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இக்குழு முன்பு இலங்கை அட்டர்னி ஜெனரல் ஜெயந்தா ஜெயசூரியா தலைமையிலான பிரதிநிதிகள் ஆஜராகி உள்ளனர்.

இக்குழுவில் இலங்கை புலனாய்வு பிரிவு தலைவர் சிசிரா மெண்டிஸும் இடம் பெற்றுள்ளார். இது விசாரணைக் குழு உறுப்பினர் களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும் ஆட்சேபம் தெரி வித்துள்ளன.

ஏனெனில், இறுதிக்கட்ட போரின் போது போலீஸ் உயர் அதிகாரியாக மெண்டிஸ் இருந்ததாகவும் இவரின் கீழ் பணியாற்றியவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடு பட்டதாகவும் கடந்த ஆண்டு தயா ரிக்கப்பட்ட ஐநா ஆய்வு அறிக்கை யில் ஆதாரத்துடன் குறிப்பிடப் பட்டுள்ளது.

நேற்று நடந்த விசாரணையின் போது, “நீங்கள் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது நடந்த போரில், ராணுவம் பொதுமக்களை துன்புறுத்தியதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன” என விசாரணைக்குழு துணைத் தலைவர் பெலிஸ் காயர் மெண்டி ஸிடம் கேட்டார். இதற்கு மெண்டிஸ் பதில் அளிக்கவில்லை.

அப்போது குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல் ஜெயசூர்யா, “அனைத்து கேள்விகளுக்கும் 48 மணி நேரத்தில் எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கி றோம்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT