அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்படும். பிற்பகலில் முழுமையான முடிவுகள் வெளியாகும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் (69) குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு ட்ரம்பும் (70) களத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் சில மணி நேரம் வித்தியாசம் உள்ளது. கிழக்கு மாகாணங்களில் முன்கூட்டியும் மேற்கு மாகாணங்களில் பிந்தியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அந்தந்த மாகாண நேரப்படி காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சுமார் 10 மணி நேர வித்தியாசம் இருப்பதால் இந்திய நேரப்படி நேற் றிரவு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதிபர் தேர்வு முறை
அமெரிக்க அதிபரை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பது இல்லை. அதற்கு மாறாக 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் இருந்து 538 தேர்வாளர்கள் தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். அவர்களைத் தேர்ந்தெடுக்கவே அமெரிக்க மக்கள் நேற்று வாக்களித்தனர்.
அந்தந்த மாகாணங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப தேர்வாளர் வாக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியாவில் 55 தேர்வாளர் வாக்குகளும் சிறிய மாநிலங்கள், கொலம்பியா மாவட்டத்தில் 3 தேர்வாளர் வாக்குகளும் உள்ளன.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் மொத்தமுள்ள 538 தேர் வாளர் வாக்குகளில் பாதியளவான 269-க்கு ஒன்று கூடுதலாக அதாவது 270 வாக்குகளைப் பெற வேண்டும்.
மாகாண வாரியாக முடிவு
ஒவ்வொரு மாநிலத்திலும் யார் வெற்றி பெறுகிறார் என்பதை அமெரிக்க ஊடகங்கள் நாட்டின் வரைப்படம் மூலமாக அறிவிக்கும். ஜனநாயக கட்சியின் நிறம் நீலம். குடியரசு கட்சியின் நிறம் சிவப்பு. அமெரிக்க வரைபடத்தில் மாகாண வாரியாக அந்த கட்சிகளின் நிறங்கள் நிரப்பப்படும். அதுவரை முடிவு வெளிவராத மாகாணங்கள் ஊதா நிறத்தில் காட்டப்படும்.
இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி முதல் முடிவுகள் அறிவிக்கப் படும். பிற்பகலில் முழுமையான முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமெரிக்காவின் 45-வது அதிபர் ஹிலாரியா அல்லது ட்ரம்பா என்பது தெரிந்துவிடும்.
எனினும் புதிய அதிபர், துணை அதிபரை டிசம்பர் 19-ம் தேதிதான் 538 தேர்வாளர்களும் அதிகாரபூர்வ மாக தேர்ந்தெடுப்பார்கள். புதிய அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார்.
ஹிலாரிக்கே வெற்றிவாய்ப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஆரம்பம் முதலே ஹிலாரி கிளின்டன் முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இதுவரை வெளியான அனைத்து கருத்துக் கணிப்புகளையும் ஆய்வு செய்து அமெரிக்காவின் முன்னணி இணையதளம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஆய்வுக்காக மொத்தம் 19 கருத்துக் கணிப்பு முடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 17 கருத்துக் கணிப்புகளில் ஹிலாரியே முன்னிலையில் உள்ளார். 2 கருத்துக் கணிப்பு முடிவுகளில் மட்டுமே ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். எனவே எங்களின் கணிப்புப்படி ஹிலாரி வெற்றி பெறுவதற்கு 70 சதவீத வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.