உலகம்

புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்க - இந்திய உறவு வலுவாகும்: முன்னணி ஊடகங்கள் கருத்து

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் ஆட்சியில் இந்தியாவுடனான உறவு மேலும் வலுவாகும் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான பாக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

தேர்தல் பிரச்சாரத்தின்போது நியூஜெர்ஸியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார். அமெரிக்க, இந்திய உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேவை அவர் தேர்வு செய்துள்ளார். இதில் இருந்தே அவர் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தொழிலதிபரான ட்ரம்ப் 111 சர்வதேச தொழில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் மிக அதிகபட்சமாக இந்தியாவில் 16 திட்டங்களில் அவர் முதலீடு செய்துள்ளார். தொழிலதிபராக இருக்கும்போதே இந்தியாவுக்கு ட்ரம்ப் அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் அதிபரான பிறகும் அதே அணுகுமுறையை கையாள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நெருடல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

எனினும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு ட்ரம்ப் முதலிடம் அளிப்பார் என்று பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT