பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி 
உலகம்

தெஹ்ரான் மெட்ரோ நிலையத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு: வெளியான பரபரப்பு காட்சிகள்

செய்திப்பிரிவு

தெஹ்ரான்: ஈரானின் தெஹ்ரான் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெட்ரோ நிலையத்தில் பயணிகள் பலர் ரயிலுக்காக காத்து கொண்டிருந்தனர். இதில் போராட்டக்காரர்களும் கலந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் ஹிஜாப் அணியாத பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால், மெட்ரோ நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் தொடர்ந்து “நாங்கள் போராடுவோம்” என்று முழக்கமிட்டனர்.

இந்த தள்ளுமுள்ளு காரணமாக பல பயணிகள் காயம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஈரானின் போராட்டக்காரர்கள் மீது நடத்தும் வன்முறையை கைவிட வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமாகியுள்ளது. ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 15,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT