உலகம்

அண்டை நாடுகளுடன் நட்புறவு: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை பேண விரும்பும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை அமெரிக்க உயர் அதிகாரிகள், தெற்காசிய அரசியல் துறை ஆய்வு வல்லுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவின்போது, அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் அமைப்பு நாடுகளின் பிரதமர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இது, பக்கத்து நாடுகளுடன் சுமுகமான உறவை பேண வேண்டும். நட்புறவை பலப்படுத்த வேண்டும், என்ற அவரின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இது தெற்காசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையாகும்.இப்போதைய நிலையில், ஐரோப்பிய நாடுகளுடனும், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுடனும்தான் இந்தியா அதிகளவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

அதை ஒப்பிடும்போது அண்டை நாடுகளுடனான வர்த்தகம் மிகவும் குறைந்த அளவிலேயே நடக்கிறது. தனது பக்கத்து நாடுகளுடன் இணைந்து தெற்காசியா முழுவதும் வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் இப்பிராந்தியம் முழுவதும் அமைதியையும் செழுமையையும் இந்தியாவால் ஏற்படுத்த முடியும்.

சார்க் அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான இந்தியாவின் புதிய அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை” என்றார். அதிபர் ஒபாமா அரசு நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரி விக்ரம் சிங் கூறும்போது, “சர்வதேச விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துச் செல்கிறார்” என்றார்.

SCROLL FOR NEXT