புவிவெப்ப மாற்றத்தால் ஏற்படக் கூடிய ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண்டியதே, உலக நாடுகளின் இப்போதைய உடனடி நடவடிக்கையாகவும், தலையாய கடமையாகவும் இருக்க வேண்டும்’ என, இந்தியா உள்ளிட்ட 200 நாடுகள் ஒன்றிணைந்து முக்கிய பிரகடனத்தை வெளியிட்டுள்ளன.
புவி வெப்பமயமாதலால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளைத் தடுத்து நிறுத்த, உலகளாவிய சராசரி வெப்ப நிலையை, 2.0 டிகிரி செல்ஷியஸுக்கு குறைவாக இருப்பதை உறுதி செய்ய 2015-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் வகை செய்கிறது.
இதன்படி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும், தொழிற்சாலை இயக்கத்தைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் பெறப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளன.
இந்த சூழலில், புவி வெப்ப விவகாரத்தில் மாற்றுக் கருத்து கொண்ட டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராகி யுள்ளார். புவிவெப்பமயமாதல் என்றொரு பிரச்சினையே கிடையாது என்றும் அது வளர்ச்சியை தடுக்க எதிரிகளால் சித்தரிக்கப்பட்டவை என்றும் ட்ரம்ப் கூறி வந்துள்ளார்.
மேலும், நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் பாறை பகுதி எரிவாயு (ஷேல்) தொழில் துறையை ஊக்குவித்து, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தப் போவதாகவும் அவர் ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது அதிபர் பொறுப் பேற்ற நிலையில், 2015-ல் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை அவர் திரும்பப்பெற வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், புவிவெப்பம் தொடர்பான ஐ.நா.சபையின் முக்கிய கூட்டம் மொராக்கோவின் மர்ராகேஷில் நடைபெற்றது.
உடனடி நடவடிக்கை
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட 200 நாடுகள் பங்கேற்ற இம்மாநாட்டில், ‘புவி வெப்ப மாற்றத்தால் ஏற்படக் கூடிய ஆபத்தை தடுக்க வேண்டியதே சர்வதேச நாடுகளின் அவசரக் கடமை’ என்ற பிரகடனம் வெளியிடப்பட்டது.
இதுவரையில்லாத அளவுக்கு புவி வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் ஈடுசெய்ய முடியாத பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். அபாயகரமான இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டியதே, உலக நாடுகளின் தலையாயப் பணியாகவும், உடனடி நடவடிக் கையாகவும் இருக்க வேண்டும் என, அப்பிரகடனத்தில் கூறப் பட்டுள்ளது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் இதனை வரவேற்றுள் ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் புவி வெப்ப விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வார் என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறினார்.