உலகம்

2016-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதர்: டைம் கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி முன்னிலை

பிடிஐ

‘டைம்’ பத்திரிகை நடத்தும், 2016-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்களை பின்னுக்குத் தள்ளி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் உலக பிரசித்திப் பெற்ற ஆங்கில வார இதழான ‘டைம்’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய நிகழ்வுகளிலும் செய்திகளிலும் அதிகம் செல்வாக்கு செலுத்திய நபரை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம்.

‘பர்ஸன் ஆஃப் தி இயர்’ என்ற தலைப்பில் 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்வு செய்ய முதல்கட்டமாக வாசகர்கள் மத்தியில் இணைய வழியாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், புரட்சியாளர்கள், விஞ்ஞானிகள் என பலதரப்பட்ட ஆளுமைகளில், 2016-ம் ஆண்டுக்கு சிறப்பாக வடிவம் கொடுத்த, அதிகப்பட்ச பங்களிப்பு வழங்கிய நபரை தேர்வு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதில் ஆரம்பகட்ட நிலவரமாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக, 21 சதவீத வாக்குகள் பதிவாகி, அவர் முன்னிலையில் உள்ளார். மோடிக்கு அடுத்தபடியாக, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே 10 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.

இவர்களுக்கு அடுத்த நிலையிலேயே அமெரிக்க அதிபர் ஒபாமா 7 சதவீதமும், ரஷ்ய அதிபர் புதின் 6 சதவீதமும், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ட்ரம்ப் 6 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வாசகர்கள் மத்தியில் நடத்தப்படும் இந்த கருத்துக்கணிப்பின் இறுதி நாளான டிசம்பர் 4-ம் தேதி அன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆதரவு இதே நிலையில் நீடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இப்பட்டியலில், அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், எப்பிஐ தலைவர் ஜேம்ஸ் கோமி, ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், வடகொரிய தலைவர் னிம் ஜாங் உன், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீனத் தலைவர் ஸி ஜின்பிங் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

2014-ம் ஆண்டிலும் டைம் நடத்திய இதே கருத்துக்கணிப்பில் அந்தாண்டுக்கான மனிதராக மோடி தேர்வு செய்யப்பட்டார். எனினும், 2015-ல் முதல் 8 பேர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெறவில்லை. கடந்தாண்டு இந்த பெருமையை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் தட்டிச்சென்றார்.

SCROLL FOR NEXT