மாலே: மாலத்தீவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 தொழிலாளர்கள் பலியாகினர்.
மாலத்தீவின் தலைநகர் மாலேவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமே எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். இவர்களில் 9 பேர் இந்தியர்கள். பலர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் கூறும்போது, “மாலேவில் நடந்த இந்த மோசமான விபத்து எங்களைத் துயரில் ஆழ்த்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
மாலத்தீவின் மக்கள் தொகையில் பாதி எண்ணிக்கையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இங்கு தங்கியுள்ள தொழிலாளர்கள் பலரும் இந்தியா, நேபாளம், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள தொழிலாளர்கள் பலர் சிறிய சிறிய அறைகளில் தங்கி இருக்கின்றனர். அங்கு கரோனா காலத்தில் இந்த நெருக்கமான அறைகள் காரணமாக தொற்றின் வேகம் அதிகமாக இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், அங்கு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.