உலகம்

உலக மசாலா: காக்கும் கடவுள் சென் சி

செய்திப்பிரிவு

சீனாவின் நான்ஜிங் பகுதியில் யாங்சீட்சீ ஆற்றின் பாலம், உலகில் தற்கொலை செய்துகொள்ளும் பிரபலமான இடங்களில் ஒன்று. சென் சி வார இறுதி நாட்களில் இந்தப் பாலத்துக்கு வருகிறார். தற்கொலை செய்யப் போகிறவர்களைக் காப்பாற்றுகிறார். கடந்த 13 ஆண்டுகளில் 300 உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். “நான்ஜிங் மக்கள் மட்டுமின்றி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நானும் ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளிதான்.

என் குடும்பத்தின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றேன். அப்போது ஒரு முதியவர் என்னைக் காப்பாற்றினார். சில மாதங்களுக்குப் பிறகு அந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிந்து, அதிர்ந்து போனேன். இந்த மரணம் என்னை வெகுவாகப் பாதித்தது. இனிமேல் தற்கொலைகளைத் தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 25 கி.மீ. தூரத்தில் இருந்து வார இறுதி நாட்களில் இங்கே வந்துவிடுவேன். பைனாகுலருடன் பாலத்தில் நிற்பவர்களைக் கவனிப்பேன். விரக்தியோடு ஆற்றைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களை அழைத்துப் பேசுவேன். அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வேன். என்னுடைய ஆறுதலும் நம்பிக்கையான வார்த்தைகளும் அவர்களின் மனத்தை மாற்றும். பணம் இல்லாதவர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைப்பேன். இதுவரை 300 உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறேன்.

என் காலம் இருக்கும்வரை இந்தப் பணியைச் செய்வேன்” என்கிறார் சென் சி. தற்கொலை செய்துகொள்ள வருபவர்களில் சிலர் மனத்தால் காயம்பட்டிருப்பார்கள், சிலர் உடலால் காயம்பட்டிருப்பார்கள். ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்ப, அவர்களைக் கையாள்வதில் சென் சி கெட்டிக்காரர். தேர்ந்த மன நல ஆலோசகர் போல, அத்தனை அற்புதமாகப் பேசுவார். அவரிடம் பேசிய சில நிமிடங்களிலேயே, தற்கொலை எண்ணம் மறைந்துவிடும். அதனால் மக்கள், சென் சியை ‘நான்ஜிங்கின் காக்கும் கடவுள்’ என்று அழைக்கின்றனர். தான் இல்லாதபோது தற்கொலை செய்துகொள்ள வருபவர்களுக்கு உதவும் விதத்தில், தன்னுடைய தொலைபேசி எண்களைப் பாலத்தில் எழுதி வைத்திருக்கிறார். சமீபத்தில் சென் சி யைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

காக்கும் கடவுள் சென் சிக்கு வந்தனம்!

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசிக்கும் ஜோ சாண்ட்லருக்கு மட்டும் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியாது. “நான் தேர்தல் நடந்த இரவு ஒரு பார்ட்டிக்குச் சென்றேன். எல்லோரும் அடுத்த ஜனாதிபதி யார் என்ற பதற்றத்தில் நகங்களைக் கடித்துக்கொண்டிருந்தனர். அந்த 24 மணி நேரமும் யார் வருவார் என்ற சுவாரசியத்தில் கழிந்தது. அந்த சுவாரசியத்தை நான் இழக்க விரும்பவில்லை.

அதனால் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைக் கேட்காமல் நாட்களைக் கடத்த முடிவு செய்தேன். தொலைக்காட்சி பார்க்கவில்லை. செய்தித்தாள்களைப் படிக்கவில்லை. பெரும்பாலும் வீட்டை விட்டுச் செல்லவில்லை. யாரைச் சந்தித்தாலும் காதில் ஹெட்போன் மாட்டிக்கொள்வேன். ‘எனக்கு யார் வெற்றி பெற்றார் என்று தெரியாது. தயவு செய்து நீங்களும் சொல்ல வேண்டாம்’ என்று எழுதிக் காண்பித்துவிடுவேன். இப்படி இருப்பது மிகவும் கடினம். ஆனாலும் எனக்குப் பிடித்திருக்கிறது. 2 வாரங்களைக் கடத்திவிட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும் என்று பார்க்கலாம்” என்கிறார் ஜோ சாண்ட்லர்.

இப்படியும் ஒரு மனிதர்!

SCROLL FOR NEXT