உலகம்

''எனக்கு ஏதாவது நேர்ந்தால் நான்கு பேர்தான் காரணம்'' - துப்பாக்கிச் சூடு குறித்து இம்ரான் கான்

செய்திப்பிரிவு

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் நேற்று நடந்த பேரணியில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காலில் குண்டு காயமடைந்த இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று சிகிச்சை முடிந்த நிலையில், தனக்கு நடந்த தாக்குதல் குறித்து பேசினார் இம்ரான். சக்கர நாற்காலியில் அமர்ந்து அவர் பேசுவதாக வெளியாகியுள்ள வீடியோவில், "அன்று நான் கன்டெய்னரில் இருந்தபோது திடீரென என் கால்களில் குண்டுகள் பாய்ந்து கீழே விழ ஆரம்பித்தேன். இரண்டு பேர் என்னை சுட்டனர். அவர்கள் ஒன்றாக சேர்ந்து சுட்டிருந்தால், நான் பிழைத்திருக்க மாட்டேன். மொத்தம் நான்கு தோட்டாக்கள் என்னை தாக்கியது.

தாக்குதலுக்கு முந்தைய நாள், வஜிராபாத்திலோ அல்லது குஜராத்திலோ என்னைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர் என்பதை அறிந்துகொண்டேன். முதலில் நான் மதத்தை அவமதித்தேன் என்று என்னை குறிவைத்து வதந்தி கிளப்பப்பட்டது. இப்போது, ஒரு மத தீவிரவாதி என்னை கொலை செய்ய முயற்சித்துள்ளான். இவற்றையெல்லாம் யார் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நான்கு பேர் என்னைக் கொல்ல சதி செய்தார்கள். அவர்கள் யார் என்பது தொடர்பாக என்னிடம் ஒரு வீடியோ உள்ளது. எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது வெளியிடப்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இம்ரான் கானை சுட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், "நான் இம்ரான் கானைக் கொல்லத்தான் வந்தேன். அவர் மக்களை தவறாக வழிநடத்துவதால் நான் இதைச் செய்தேன். தவறாக வழிநடத்தியதை என்னால் தாங்க முடியவில்லை என்பதால் அவர் பேரணியைத் தொடங்கிய அன்றே கொலை செய்ய முடிவு எடுத்தேன். நான் தனியாகத் தான் இதைச் செய்தேன். எனக்கு பின்னால் யாரும் இல்லை. நானும் யாருடனும் இதை செய்யவில்லை" இவ்வாறு தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT