இராக்கின் ஹில்லா நகரில் நடத்தப்பட பயங்கர தற்கொலைத் தாக்குதலில் 80 பேர்ககளுக்கும் மேல் பலியாகியுள்ளனர். இஸ்லாமி ஸ்டேட் பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
பாக்தாத்திற்கு 100கிமீ தெற்கே ஹில்லா நகரில் பெட்ரோல் நிலையத்தில் வெடிபொருட்கள் நிரம்பிய லாரி ஒன்று வெடிக்கச்செய்யப்பட்டதில் பெரும்பாலும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர்.
இராக் புனிதநகரான கெர்பலாவில் 40வது துக்க தினத்தை அனுஷ்டிக்க ஷியா யாத்திரிகர்கள் மசூதிக்கு வந்து தொழுகை நடத்தி விட்டு உணவு விடுதிக்கு வந்திருந்தனர். இவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்குப் பிடித்தமான உணவுவிடுதி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் நிலையத்தை வெடிபொருட்கள் நிரம்பிய லாரியைக் கொண்டு தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் யாத்திரிகர்கள் வந்த 5 பேருந்துகளும் எரிந்து சாம்பலாயின.
அமெரிக்க ஆதரவுடன் ஐஎஸ் தீவிரவாதத்தை எதிர்த்து இராக்கிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் விதமாகவும், ஷியா பிரிவினர் மேல் உள்ள வன்மத்தினாலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.