சியோல்: தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் திருவிழாவில் (பேய்களின் திருவிழா) கூட்டநெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் அக். 31-ம் தேதி நடைபெறும் ஹாலோவீன் திருவிழாவையொட்டி, சியோலில் கடந்த சில நாட்களாக இரவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். எலும்புக்கூடு, சூனியக்காரி, ஓநாய் உள்ளிட்ட வேடமணிந்த இளைஞர்கள், இளம்பெண்கள் சாலையெங்கும் சுற்றித் திரிந்தனர்.
மத்திய சியோலில் உள்ள இடேவானில் ஏராளமான ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ஹாலோவீன் திருவிழாவையொட்டி கடந்த சனிக்கிழமை இரவு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடேவான் பகுதியில் குவிந்தனர்.
அங்குள்ள குறுகிய சாலையில் ஏராளமான மதுபான விடுதிகள் அமைந்துள்ளன. மலைப் பகுதி என்பதால், சாலை மேலிருந்து கீழாக சாய்வாக அமைந்துள்ளது. சுமார் 45 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்ட சாலையில், ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.
திடீரென, பிரபல `கே பாப்' இசைப் பாடகர் ஒருவர் வந்ததாக தகவல் வெளியானதால், அவரைப் பார்க்க இளைஞர்களும், இளம்பெண்களும் முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 153 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இவர்களில் சுமார் 100 பேர் பெண்கள். உயிரிழந்த அனைவரும் 16 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும்,100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார் என 1,700-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே சடலங்கள், ஆடைகள், காலணிகள், பொருட்கள் என அப்பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது. தொடர்ந்து, அங்கு தற்காலிக மருத்துவ மையம் அமைக்கப்பட்டு, காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தென்கொரிய அதிபர் யுன் சுக் இயோல் கூறும்போது, “சியோல் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தென்கொரியா முழுவதும் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும். நாடு முழுவதும் ஹாலோவீன் திருவிழாவுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. கே பாப் இசை நிகழ்ச்சி, கேளிக்கை நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சீனா, ஈரான், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம், கஜகஸ்தான், ஆஸ்திரியா, இலங்கை, தாய்லாந்து, நார்வேநாடுகளைச் சேர்ந்த 25 பேரும்உயிரிழந்திருப்பது முதல்கட்டவிசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மாணவி சோனாலி கூறும்போது, “கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில், நானும், நண்பர்களும் ஒரு விடுதிக்குள் இருந்ததால் உயிர் பிழைத்தோம். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பலருக்கு மருத்துவப் பணியாளர்கள் சிபிஆர் சிகிச்சை அளித்ததால், அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டது” என்றார்.
போலீஸார் விளக்கம்: இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “குறுகிய இடத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால், அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 50 பேர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போதைப் பொருட்களை உட்கொண்டது, மது போதையில் இருந்தது ஆகியவையும் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம். போதையில் இருந்தவர்களால் உடனடியாக சுதாரித்துக் கொள்ள முடியவில்லை” என்றனர்.