கோப்புப்படம் 
உலகம்

சவுதியில் பொறியாளராக பணிபுரிய அங்கீகார சான்றிதழ் கட்டாயம்

செய்திப்பிரிவு

சென்னை: சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன், அனைத்து விதமான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது.

சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் பொறியாளர்கள் அந்த நாட்டின் சவுதி பொறியாளர்கள் குழுமத்தில் கட்டாய தொழில் முறை அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும். முறையான அங்கீகாரம் பெறாதவர்கள் பொறியாளர்களாக பணிபுரிய அனுமதி வழங்கப்படாது என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. இத்தகவல் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து கிடைத்துள்ளது.

எனவே, சவுதியில் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள், தற்போது பொறியியல் படித்து வரும் மாணவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT