அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்த லோடு நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதித்துவ சபையில் 435 இடங்களுக்கும் (2 ஆண்டு பதவிக் காலம்) 34 செனட்டர் பதவிகளுக்கும் (6 ஆண்டு பதவிக் காலம்), 12 மாகாண ஆளுநர் பதவிக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
ஜனநாயக கட்சி
ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியின் பிரச்சாரத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா நந்தன், ஹூமா ஆகியோர் ஆரம்பம் முதலே தலைமையேற்று வழிநடத்தி வருகின்றனர். இவர்கள் தவிர மினி திம்மராஜு, மாயா ஹாரிஸ், ஷிபாலி ஆகிய இந்தியப் பெண்களும் ஹிலாரியின் பிரச்சாரக் குழுவில் முக்கிய பொறுப்புகளில் இடம்பெற்றுள்ளனர். பிரச்சாரம் மட்டுமன்றி தேர்தலிலும் இந்திய பெண்கள் நேரடியாக களம் இறங்கியுள்ளனர்.
வாஷிங்டனின் சியாட்டில் செனட்டர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் பிரமிளா ஜெயபால் போட்டியிடுகிறார். இவர் சென்னையில் பிறந்தவர் ஆவார். அதே கட்சி சார்பில் கலிபோர்னியா செனட்டர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர்.
குடியரசு கட்சி
ஜனநாயக கட்சி மட்டுமன்றி குடியரசு கட்சியிலும் இந்திய வம்சாவளி பெண்கள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே திறம்பட பதவி வகித்து வருகிறார். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
தற்போது புளோரிடா செனட்டர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட லத்திகா மேரி தாமஸ் போட்டியிடுகிறார்.
குடியரசு கட்சியின் தேசிய கமிட்டி உறுப்பினராக ஹர்மித் தில்லான் என்பவர் இடம்பெற் றுள்ளார். கலிபோர்னியா மாகாண கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ள அவர் கடந்த ஜூலையில் நடந்த கட்சி மாநாட்டில் சீக்கிய மத பிரார்த்தனையை நடத்தினார். வெர்மாண்ட் மாகாண அவையின் இளம் உறுப்பினர் என்ற பெருமையை இந்திய பெண் கேஷா ராம் (30) பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இரு கட்சிகளுக்கும் நன்கொடை அளிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர். அந்தவகையில் இஸ்ரேலியர்களுக்கு அடுத்ததாக அமெரிக்க இந்தியர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர்.