இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்கவுள்ளார். புதிய வரலாறு படைத்துள்ள ரிஷி குறித்து இந்தியர்கள் பலரும் வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், சிலர் மீம்களில் அவரை பதிவு செய்திருந்தது கவனம் ஈர்த்தது.
ரிஷியை வாழ்த்துவதற்கு பலர் அவருக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவை ஷேர் செய்திருந்தனர். ரிஷியும் நெஹ்ராவும் தோற்றம் பார்ப்பதற்கு ஒரே போல் இருப்பதால், அதை குறிப்பிட்டு ஷேர் செய்ய சில மணிநேரத்தில் மீம்களாக அது பரவியது. அதில் சில இங்கே,
ஒரு பயனர், "இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ஆஷிஷ் நெஹ்ரா பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள். 'ஐ.டி'யை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்." என்று இருவரது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதைப்போன்று பலர் நெஹ்ராவை தொடர்புபடுத்தி பதிவிட்டு வருகின்றனர்.
கோஹினூர் வைரம்: ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வைரம் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்கு கோஹினூர் என்று பெயர் வைத்தனர். தற்போது உலகிலேயே மிகப்பெரிய வைரமாக (105 கேரட்) கோஹினூர் உள்ளது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. கோஹினூர் வைரம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது. அந்த கிரீடத்தை ஆண்டுக்கு ஒருமுறை பொது மக்களின் பார்வைக்கு வைக்கின்றனர். இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரத்தை இங்கிலாந்திடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை குரல்கள் உள்ளன. இப்போது இந்திய வம்சாவளி ரிஷி பிரதமராக பதவி ஏற்க இருப்பதால் கோஹினூர் வைரத்தை அவர் மீட்டெடுப்பார் என்று வலைதளங்களில் பேசப்படுகிறது.
ரிஷி சுனக் பிரதமரானவுடன் கோஹினூரை திரும்பப் பெறுவது எனது முட்டாள்தனமான திட்டம் என்று குறிப்பிட்டு ராமுடு என்று ட்விட்டர் பயனர் வெளியிட்டுள்ள சில அறிவுரைகள் சிரிப்பை வரவழைக்கும். அவர், "இந்தியாவிற்கு ரிஷியை வரவழைக்க வேண்டும். பெங்களூருவில் அவரின் மாமனார் வீட்டுக்குச் செல்லும்போது அவரை பெங்களூரு டிராபிக்கில் சிக்க வைத்துவிட்டு அவருக்குப் பதிலாக ஆஷிஷ் நெஹ்ராவை புதிய பிரதமராக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்து கோஹினூர் வைரத்தை மீட்கலாம்." என்று பதிவிட்டுள்ளார்.
- Kaustav Dasgupta