பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தரைவழி தாக்குதல் மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ உத்தரவிட்டுள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடங்கி 10 நாட்கள் கடந்து விட்டன. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஐ.நா. வேண்டுகோளுக்கு இணங்கி 5 மணி நேரம் இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டன. மனிதாபிமான அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
5 மணி நேர கட்டுப்பாடு விலகியவுடனேயே இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவும், பாதுகாப்பு அமைச்சரும் தரைவழித் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும். காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்கள் வழியாக இத்தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் பதிவு செய்துள்ள ட்வீட்டில், "இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா மீது தரைவழி தாக்குதலை துவக்கியுள்ளது. 'ஆபரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்' புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "பத்து நாட்களாக ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் காஸா மீது தரைவழித் தாக்குதல் மேற்கொள்ள தூண்டியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காஸா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை துவக்கியுள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். போர் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. நான் பலமுறை வலியுறுத்தியும், உலக தலைவர்கள் பலரும் கேட்டுக் கொண்ட பின்னரும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்வது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.