உலகம்

சிக்கன் பிரியாணி ஆர்டரை மாற்றியதால் ஆத்திரம்: வங்கதேச உணவகத்திற்கு தீவைத்த அமெரிக்கர்

செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தான் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணிக்கு பதில் வேறு உணவு அளிக்கப்பட்டதாகக் கூறி வங்கதேச கடைக்கு தீ வைத்தார் அமெரிக்கர் ஒருவர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குயீன்ஸ் பரோ என்ற பகுதியில் வங்கதேச உணவகம் ஒன்று இருக்கிறது. அந்த உணவகத்தில் சோபெல் நோர்பு என்ற 49 வயது நபர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அதற்குப் பதிலாக வேறு உணவு வழங்கப்பட்டதால் அந்தக் கடைக்கு அவர் தீ வைத்தார் என்பதே குற்றச்சாட்டு. ஆனால், இது குறித்து நோர்பு, "நான் அன்றைய தினம் மது அருந்தியிருந்தேன். சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்திருந்தேன். ஆனால், அவர்கள் எனக்கு அதைத் தராமல் வேறு உணவு தந்தனர். அதனால் ஆத்திரத்தில் அதை தூக்கி எறிந்தேன். மற்றபடி வேறேதும் செய்யவில்லை" என்றார்.

ஆனால், இட்டாடி கார்டன் என்ற அந்தக் கடையின் ஊழியர் ஜஹானா ரஹ்மான் கூறுகையில், "நோர்பு கொடுத்த ஆர்டரில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனாலும் அவர் அன்று நடந்துகொண்ட விதம் ரொம்பவே குழப்பமானது. அவர் கேட்ட சிக்கன் பிரியாணியை ஊழியர்கள் கொண்டு சென்றபோது என்னவென்று கேட்டார். ஊழியர்கள் நீங்கள் ஆர்டர் கொடுத்த சிக்கன் பிரியாணி என்றனர். ஆனால் அவரோ அதனை ஊழியர்கள் மூஞ்சியில் விட்டெறிந்தார்” என்றார். இந்நிலையில், அந்தக் கடைக்கு மறுநாள் காலையில் யாரோ தீவைத்தாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. கடை உரிமையாளர் கொடுத்த புகார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நோர்பு கைது செய்யப்பட்டார்.

அந்த வீடியோவில், சந்தேக நபர் ஒருவர் கருப்பு நிற ஹூடி, ஜீன்ஸ் அணிந்து வருகிறார். கையில் இருந்த கேனில் இருந்து ஏதோ திரவத்தை ஊற்றிய நெருப்பு வைக்கிறார். பின்னர் அங்கிருந்து அவசர அவசரமாக ஓடுகிறார். இந்த தீ விபத்தால் கடைக்கு 1500 டாலர் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 10 நாட்களாக தலைமறைவான நோர்புவை போலீஸார் பிடித்தனர். அவர் மீது கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT