அமெரிக்காவின் மினசோட்டாவில் வசிக்கிறார் 29 வயது ஜோஹன்னா வாட்கின்ஸ். இவருக்கு நூற்றுக்கணக்கான பொருட்களின் மீது ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது. கணவரின் வாசனை கூட ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டு காலமாகத் தனிமையில், பாதுகாக்கப்பட்ட ஓர் அறையில் வசித்து வருகிறார்.
ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த அறையைவிட்டு வெளியே வந்தால், உடனே நிலைமை மோசமாகி, மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆகிவிடுகிறது. ஜோஹன்னாவும் ஸ்காட்டும் ஆசிரியர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். ஜோஹன்னாவுக்கு ஒரு சில விஷயங்களில் ஒவ்வாமை இருப்பது, ஸ்காட்டுக்கும் தெரியும்.
இரண்டு ஆண்டுகள் சந்தோஷமாகக் கழிந்தன. ஆனால் திடீரென்று நிலைமை மோசமானது. உணவுகளில்தான் ஒவ்வாமை என்று பலமுறை உணவுப் பழக்கத்தை மாற்றிப் பார்த்தார். பலன் இல்லை. மருத்துவரிடம் சென்றபோது, Mast Cell Activation Syndrome என்ற அரிய வகை மரபணுக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. தற்போது ஜோஹன்னாவின் உடல் 15 உணவுப் பொருட்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது.
“கடந்த ஒரு வருடமாக 2 வகை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். இதையாவது சாப்பிட முடிகிறதே என்பதில் மகிழ்ச்சி. சோப், ஷாம்பூ, வெங்காயம், பூண்டு, மனிதர்களின் வாடை என்று எதையும் என் உடல் ஏற்றுக்கொள்ளாது. கடந்த ஜனவரியில் இருந்து கணவரின் வாசனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னைப் பார்ப்பதற்கு ஸ்காட் பலமுறை குளிக்கிறார். முகமூடி அணிந்துகொண்டு அறைக்குள் வந்தால், 2 நிமிடங்கள் வரை மட்டுமே அவர் இருக்கலாம்.
ஸ்காட் பக்கத்து அறையில் இருந்து ஸ்கைப் மூலம் பேசுவார். வேலைக்குச் சென்றால் இமெயில், குறுஞ்செய்தி மூலம் தொடர்பில் இருப்பார். வீட்டைச் சுத்தம் செய்வது, துணிகளைத் துவைப்பது, எனக்கான உணவுகளைச் சமைப்பது, என்னைப் பார்த்துக்கொள்வது என்று ஸ்காட்டுக்கு நாள் முழுவதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். என்னால் அவர் மிகவும் துன்பப்படுகிறார்” என்று வருந்துகிறார் ஜோஹன்னா.
“நேசிக்கும் மனிதர்களின் துயரத்தைத் துடைப்பதில்தானே உண்மையான அன்பு இருக்கிறது விரைவில் ஜோஹன்னா குணமடைவார்” என்கிறார் ஸ்காட்.
அற்புதமான கணவரின் துயர், பனி போல் விலகட்டும்!
ஜப்பானிய நிறுவனங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் நல்ல முறையில் வர்த்தகத்தை நடத்துவதற்கு, மொழிபெயர்ப்பு மெகாபோனை உருவாக்கியிருக்கிறது பேனசோனிக் நிறுவனம்.
ஜப்பானிய மொழியில் பேசினால் ஆங்கிலம், சீனம், கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கிறது. இந்த மெகாபோனில் அடிப்படையான 300 வாக்கியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் இருந்து பேசினால் மட்டுமே மொழிபெயர்ப்பு கிடைக்கும்.
விமானநிலையம், ரயில் நிலையம், சுற்றுலா மையங்கள், காவல்துறை போன்ற இடங்களில் மெகாபோன் உபயோகமாக இருக்கிறது. இதுவரை சோதனை முயற்சியாக வழங்கப்பட்ட மெகாபோன், டிசம்பரிலிருந்து விற்பனைக்கு வருகிறது.
மொழிப் பிரச்சினையைத் தீர்க்கும் மேஜிக் மெகாபோன்!