உலகம்

சம்பள உயர்வு கோரி லுஃப்தான்சா பைலட்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: 115,000 பயணிகள் பாதிப்பு

ஏஎஃப்பி

ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான சேவை நிறுவன பைலட்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் இதுவரை 900 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, இதனால் 115,000 பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

லுஃப்தான்சா விமானிகள் ஆண்டு ஒன்றுக்கு 3.66% சம்பள உயர்வு கோரியும், பணிச்சூழல் சீரமைப்பு கோரியும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பணவீக்கத்தினால் விமானிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லுஃப்தான்சா நிறுவனமோ பில்லியன்களில் லாபம் ஈட்டி வருவதாக விமானிகள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

லுஃப்தான்சா 3.66% சம்பள உயர்வுக்கு ஒப்புதல் தெரிவிக்காமல் 2.5% உயர்வுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் பிரச்சினைகளை அதிகரிக்காமல் காக்பிட் யூனியன் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும் என்று நிறுவன நிர்வாகம் விமானிகள் சங்கத்தினை கேட்டுக் கொண்டுள்ளது.

“இதே மட்டத்தில் உள்ள மற்ற ஊழியர்களை விடவும் விமானிகள் அதிக ஊதியம் கோருகின்றனர்” நிறுவனத்தின் மனித வளத் தலைவர் பெட்டினா வோல்கென்ஸ் கூறுகிறார்.

இந்த வேலைநிறுத்தத்தினால் நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு 10.5 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது, இதனை ஏற்கத் தயாராக இருக்கும் நிறுவனம் விமானிகள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது என்கிறது விமானிகள் யூனியன்.

ஈசிஜெட், ரியானெய்ர் போன்ற விமான சேவை நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் சேவையளிப்பதால் லுப்தான்சாவினால் போட்டிபோட முடியவில்லை, இந்நிலையில் நிறைய ஊழியர்கள், விமானிகள் பலர் உட்பட கடந்த 2 ஆண்டுகளில் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

சம்பளம் மற்றும் பணிச்சூழல் சீரமைப்பு, வேலை நிறுத்தம் செய்யக்கூடாது, 2021 வரை வேலை உத்தரவாதம் ஆகியவை அடங்கிய ஒப்பந்தத்தை கடந்த ஜூலையில்தான் லுப்தான்சா இறுதி செய்தது. இந்நிலையில் இந்த வேலை நிறுத்தத்தினால் சுமார் 900 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, 115,000 பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT