எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ள வாசனை திரவியம் ( இடது), எலான் மஸ்க் (வலது) 
உலகம்

மீண்டும் ட்விட்டர் சர்ச்சையில் எலான் மஸ்க்

செய்திப்பிரிவு

நியூயார்க்: "நீங்கள் என்னுடைய வாசனை திரவியத்தை வாங்கிக் கொண்டால் நான் ட்விட்டரை வாங்கிக் கொள்கிறேன்" என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அத்துடன் ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க்.எனினும் கருத்து வேறுபாடு மற்றும் சட்ட சிக்கல் தொடர்பாக ட்விட்டரை வாங்குவதில் ட்விட்டர் நிறுவனம் மற்றும் மஸ்க் தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தனது நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள 'Burnt Hair' என்ற வாசனை திரவியத்தை கடந்த சில நாட்களாக எலான் மஸ்க் அறிமுகம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக 'Burnt Hair' குறித்த தீவிர விளம்பரத்தில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று (வியாழக்கிழமை) ட்விட்டரில் தன்னை பின் தொடர்பவர்களுக்கு ஒரு பதிவை எலான் மஸ்க் பகிர்ந்திருக்கிறார். அதில், “ தயவு செய்து என்னுடைய வாசனை திரவியத்தை வாங்குங்கள்... நான் ட்விட்டரை வாங்கிக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து எலான் மஸ்க் மீண்டும் ட்விட்டரை வாங்க உள்ளாரா என்ற தகவல் மீண்டும் பரவி வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குகிறாரா? இல்லையா? என்பது இம்மாதம் இறுதிக்குள் தெரிய வரும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SCROLL FOR NEXT